Rock Fort Times
Online News

திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் சிக்கிய வெளிநாட்டு பயணி- போலீசார் விசாரணை…!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தயார் நிலையில் இருந்தது.அந்த விமானத்தில் செல்லக்கூடிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணியின் உடைமையில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்தப் பயணியை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், அவர் கனடா நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் டொனால்ட் வில்சன். அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் அவர் தனது மனைவி பிரிட்டானி சீலியுடன்  ரஷ்யாவில் இருந்து இருந்து ஸ்கூட் விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைந்து, அங்கிருந்து கடந்த 17-ம் தேதி சென்னை வந்திருக்கிறார். சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் நேற்று திருச்சி வந்துள்ளார். இன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கைக்கு சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக ரஷ்யா செல்லவிருந்தார் என்பதும், அவர் வைத்திருந்தது விலங்குகளை வேட்டையாடக்கூடிய துப்பாக்கியுடைய தோட்டா என்பதும் தெரிய வந்தது. அவரிடம் அந்த துப்பாக்கிக்குரிய உரிமம் இருந்தது. ஆனாலும், விமானத்தில் அபாயகரமான வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்வது தடைச் செய்யப்பட்டுள்ளது என்பதாலும், இது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், அவரை திருச்சி விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் கனடா நாட்டு பயணியிடம் துப்பாக்கித் தோட்டா சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்