ரூ.5,555 -ல் திருச்சியிலிருந்து வியட்நாம் பறக்கலாம்…
நவம்பர் 2-ம் தேதி முதல் சேவையை துவக்குகிறது வியட்ஜெட்...
வியட்நாம் நாட்டின் முன்னணி விமான நிறுவனமாக திகழும் வியட்ஜெட், வரும் நவம்பர் 2ம் தேதி முதல் திருச்சி – வியட்நாம் இடையே வாரத்தில் 3 நாட்கள் விமான போக்குவரத்தை துவக்கவுள்ளது. இதுதொடர்பாக திருச்சி கோர்ட்யார்ட் மரியார்ட் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வியட்ஜெட் நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவு துணைத்தலைவர் ஜெய்.எல்.லிங்கேஸ்வரா கூறும்போது : இந்தியாவில் தங்களது விமான சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில், திருச்சி- ஹோ சி மின் சிட்டி இடையே விமான போக்குவரத்தை துவங்கவுள்ளோம். கொச்சியில் இருந்து ஹோ சி மின் சிட்டிக்கு செல்லும் விமான சேவையுடன் இந்த புதிய சேவையை நாங்கள் துவக்குவதன் மூலம் இந்தியாவின் தென்பகுதியை வியட்நாமுடன் இணைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். திருச்சி – ஹோ சி மின் சிட்டி இடையே வாரத்தில் 3 நாட்கள் விமான சேவையை வழங்கவுள்ளோம். அதன்படி ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஹோ சி மின் சிட்டியிலிருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் வியட்ஜெட் விமானம் இரவு 11.30 க்கு திருச்சியை வந்தடையும். இதேபோல் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருச்சியிலிருந்து நள்ளிரவு 12.30 க்கு புறப்படும் விமானம் காலை 7 மணிக்கு ஹோ சி மின் சிட்டியை சென்றடையவுள்ளது. இந்தியாவில் இருந்து வியட்நாம் செல்லும் வியட்ஜெட் விமானங்களில் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 25 வரை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளோம். அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை கூடுதல் சலுகையாக புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருச்சியிலிருந்து வியட்நாம் செல்ல ரூ.5,555 -ஐ கட்டணமாக நிர்ணயித்துள்ளோம்.குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை வழங்குவதன் மூலம் இருநாட்டு மக்களிடையே பயணம் மற்றும் வர்த்தகம் நல்ல வளர்ச்சியடையும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார். வரும் நவம்பர் 2ம் தேதி முதல் வியட்ஜெட் டெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி மற்றும் திருச்சி ஆகிய 5 நகரங்களை இணைக்கும் 35 வாராந்திர இருவழி விமான சேவைகளை வியட்நாமின் ஹனோய் மற்றும் ஹோ சி மின் சிட்டி ஆகிய நகரங்களுக்கு இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.