நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பிப்ரவரி 2ம் தேதி தொடங்கியதை அடுத்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட போவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்திருந்தார். நம் இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான், அதற்குள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என விஜய் கூறியுள்ளார். அதன்படி, விஜய் திரைப்படத்திலும் நடித்துக் கொண்டு கட்சி பணியிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் கிராமங்களில் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து பில்லா ஜெகன் த.வெ.க.வில் இருந்து நீக்கப்பட்டார். புதிய மாவட்ட செயலாளராக அவரது சகோதரர் சுமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.