நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 46 ரன்னில் சுருண்டது, 5 வீரர்கள் டக் அவுட்…!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 5 வீரர்கள் ‘டக்’ ஆகி வெளியேறினர். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (அக்.,16) துவங்க இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், ‘டாஸ்’ போடாமலேயே முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. 2ம் நாளான இன்று, ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சுப்மன் கில் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் சர்பராஸ் கான் இடம்பெற்றார். அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, 2 ரன்னில் டிம் சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ஒன்பது பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ‘டக்’ அவுட் ஆகி வெளியேறினார். சர்பராஸ் கானும் ‘டக்’ அவுட்டானார். இதனால் வெறும் 10 ரன்னில் 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது.
அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிதுநேரம் தடைப்பட்டது. மீண்டும் தொடர்ந்த ஆட்டத்தில் இந்திய அணியால் மீண்டு வர முடியாத அளவிற்கு அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 ரன்னில் கேட்சானார். பின்னர் வந்த ராகுல், ஜடேஜா, அஷ்வின் ஆகியோரும் ‘டக்’ அவுட் ஆகினர். ஓரளவு தாக்குப்பிடித்த ரிஷப் பண்ட் 20 ரன்னில் வெளியேற, பும்ரா (1), குல்தீப் யாதவ் (2) அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதனால் இந்திய அணி 46 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் 5 முக்கிய வீரர்கள் ‘டக்’ அவுட் ஆனதால், ரன் சேர்க்க முடியாமல் சுருண்டது. சொந்த மண்ணில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் என்ற மோசமான சாதனையாக இது பதிவானது. பின்னர் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Comments are closed.