மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் பயிற்சி டாக்டர் கடந்த ஆண்டு அங்குள்ள கருத்தரங்க கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டாக்டர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசியல்வாதிகள் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இச்சம்பவத்தில், அங்கு பணியாற்றிய சஞ்சய்ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். அதேபோல், பெண் டாக்டர் உடல் கண்டெடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் தொடர்ந்து ஆய்வு செய்தனர். இந்தவழக்கு கொல்கத்தா செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினமும் என 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 18-01-2025 ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது சஞ்சய்ராய் குற்றவாளி என அறிவித்த நீதிபதி அனீர்பான் தாஸ், தண்டனை விவரம் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் அவருக்கான தண்டனை விவரத்தை சியல்டா கோர்ட்டு இன்று(20-01-2025) அறிவித்துள்ளது. அதில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சஞ்சய்ராய்க்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் வழங்க மேற்கு வங்காள அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
Comments are closed.