பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை: கண்ணியமாக சாக அனுமதியுங்கள் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு உருக்கமான கடிதம்….
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் நீதிபதியாக இருக்கும் ஒருவருக்கு மாவட்ட நீதிபதி பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். அக்கடிதம் சோசியல் மீடியாவில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அக்கடிதத்தில், “எனக்கு மேற்கொண்டு வாழ விருப்பம் இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உயிரற்ற சடலமாகவே நடமாடிக்கொண்டிருக்கிறேன். ஆன்மா இல்லாத உடம்பால் எந்தவித பயனும் இல்லை. எனவே கண்ணியமான முறையில் சாக என்னை அனுமதியுங்கள். மாவட்ட நீதிபதி இரவில் சந்திக்க வருமாறு அழைக்கிறார். இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும், நீதித்துறை நிர்வாகத்திடமும் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றத்தின் புகார் கமிட்டியிலும் புகார் செய்துள்ளேன். விசாரணையை தொடங்க ஆயிரக்கணக்கான மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளது.
சாட்சிகளை மாவட்ட நீதிபதி சரிக்கட்டி விடுகிறார். மாவட்ட நீதிபதிக்கு எதிராக அவருக்கு கீழ் பணியாற்றும் யார் சாட்சி சொல்ல வருவார்கள். விசாரணை நியாயமாக நடைபெற மாவட்ட நீதிபதியை மாற்றும்படி கேட்டுக்கொண்டேன். அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லைகளால் தற்கொலைக்கு கூட முயன்று இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் சம்பந்தப்பட்ட பெண் நீதிபதி மனுத்தாக்கல் செய்திருந்தார். பெண் நீதிபதி கொடுத்துள்ள புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அலகாபாத் உயர்நீதிமன்ற நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் செகரட்டரி ஜெனரல் அதுல் அளித்த பேட்டியில், “பெண் நீதிபதி கொடுத்திருக்கும் புகார் மீது எடுக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலகாபாத் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கேட்டுள்ளார். அந்த அறிக்கை கிடைத்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். பெண் நீதிபதி கொடுத்திருக்கும், பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.