“பாஜகவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்”…- துணை முதலமைச்சர் பேச்சு..!
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றும், தமிழ்நாடு என்ற பெயரே இடம்பெறாமல் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “தஞ்சாவூர் மாவட்டம் திராவிட இயக்கத்துக்கும், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் செல்வாக்கான மாவட்டமாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கக் குடும்பமும் இணையும் விழாவாக இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டங்களின் காரணமாக தமிழ்நாடு, இந்தியாவிலேயே 11.19 சதவீத வளர்ச்சியுடன் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இதை பொறுக்க முடியாத மத்திய பாஜக அரசு, தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு வகைகளில் தொல்லைகள் கொடுத்து வருகிறது. நிதி உரிமையைப் பறிப்பது, மொழி உரிமையைப் பறிப்பது, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக பழனி மாணிக்கம் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் தற்போது மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறிக் கொண்டாலும், தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. மேலும், பட்ஜெட்டில் ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. இத்தகைய வஞ்சனைகளை கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார். ஆனால், மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசித்து முடிப்பதற்குள், மிகச் சிறந்த பட்ஜெட் என எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். பாஜகவின் முரட்டு அடிமையாக அவர் செயல்படுகிறார். எத்தனை பழைய அடிமைகள், புதிய அடிமைகள் வந்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும். தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அமர்வது உறுதி. அதற்கான தொடக்கம் தஞ்சாவூர் மாவட்டமாக இருக்கும். இதற்காக அடுத்த இரண்டு மாதங்கள் திமுக நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.

Comments are closed.