அதிமுக ஜெயித்ததால் அடிப்படை பணிகளில் சுணக்கம் ! – திருச்சி மாநகராட்சியை கண்டித்து 14வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
திருச்சி மாநகராட்சி 14வது வார்டுக்கு உட்பட்டது பாபு ரோடு, ஈபி ரோடு, திப்புரான் தொட்டி தெரு, சின்ன கடைவீதி ஆகிய பகுதிகள். இங்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.இதற்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாமல் மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இப்பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் இதனால் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயமும் இருந்து வருகிறது.
பாதாள சாக்கடையை திட்டப் பணிகளை சீக்கிரம் முடிக்குமாறு 14 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன், மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தி உள்ளார். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக கவுன்சிலர் அரவிந்தன்., எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சரி செய்து தர வலியுறுத்தி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாநகராட்சிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் 14 வது வார்டில் அதிமுக வெற்றிபெற்றதால் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பொது மக்களுக்கு நல்லது செய்ய தான் மாநகராட்சி இருக்கிறது. வேறுபாடு பார்க்காமல் உடனடியாக தார் சாலையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி கோட்டை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் பொதுமக்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.அதன்படி வருகிற 18-ம் தேதிக்குள் சாலை பணிகளை முடித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கவுன்சிலர் அரவிந்தன் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Comments are closed.