Rock Fort Times
Online News

விஜய் குறித்து  வாய் திறக்காதே…இனிகோவுக்கு திமுக தலைமை “கறார்” உத்தரவு !

திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். த.வெ.க தலைவர் விஜயும் இத்தொகுதியில் களம் காண்பதால் திருச்சி கிழக்கு தற்போது ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது.  நடைபெறவுள்ள தேர்தலில்  திமுக – த.வெ.க நேரடியாக மோதுவதால் இரண்டு வேட்பாளரும் என்ன மாதிரியான பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போகிறார்கள்?.அது மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது ?என அனைத்து தரப்பிலிருந்தும் திருச்சி கிழக்கு தொகுதியை ஆர்வத்துடன் உற்றுநோக்கி கொண்டிருக்கின்றனர். விஜய் கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து சமீபத்தில் இத்தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜூடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு விஜய் தைரியமான ஆளாக இருந்தால் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடாமல் திருச்சி கிழக்கிற்கு வரட்டும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என இனிகோ பதிலளித்திருந்தார். ஆனால், த.வெ.க.தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பெரும்படையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். இந்நிலையில் திமுக வேட்பாளரான இனிகோவை அழைத்த கட்சித்தலைமை பிரச்சாரத்திலோ, கூட்டணி கட்சியினரிடமோ விஜய் பற்றி எதுவும் பேசக்கூடாது என்கிற கறார் உத்தரவை பிறப்பித்துள்ளது என தகவல் அறிந்த வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். ஆகவே, எதிர் வரும் தேர்தல் வரை திருச்சி கிழக்கு தொகுதி திமுக கூட்டணியினர்   த.வெ.க தலைவர் விஜய் பற்றி யாரும் வாய் திறக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளருடன் வார்த்தைப் போரிடாமல் தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது? த.வெ.க குறித்து எங்களுக்கு கவலையே இல்லை எனக்கூறும் திமுக தலைமை, விஜயை விமர்சிக்கக்கூடாது எனக்கட்டளை இட்டுள்ளது ஏன் என தெரியவில்லையே ? என்கிற தி.மு. கழகத்தினரின்  முணுமுணுப்பு தொகுதி முழுவதும் எதிரொலிக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்