திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவை கற்றுத் தரப்படுகிறது. இப் பள்ளியில் 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கி நடைபெறுகிறது. இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து வசதி, ரயில் கட்டணச் சலுகை, தங்கும் விடுதி, மாதந்தோறும் ரூ. 400 ஊக்கத்தொகை, இலவச சீருடை, இலவச மிதிவண்டி, இலவச காலணி ஆகியவற்றை விதிமுறைகளுக்குள்பட்டு பெற்றுக் கொள்ளலாம். 3 ஆண்டு பயிற்சி முடிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் தேர்வு இயக்ககத்தால் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தச் சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிமூப்பு அடிப்படையில் இசைப் பள்ளிகளிலும், இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களிலும் வேலைவாய்ப்பு பெறலாம். எனவே, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் இசைப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை 0431-2962942 என்ற தொலைபேசி என்னில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
1
of 872
Comments are closed.