சிறுபான்மையினருக்காக தோளோடு தோள் நின்று உழைக்கக்கூடிய இயக்கம் தான் திமுக- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…!
தமிழக துணை முதல்வரும், தி.மு.க.இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம் மலைக்கோட்டை பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மலைக்கோட்டை பகுதி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். இதில், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை கழகச் செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் பேசும்போது எல்லாம் நாங்கள் இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்டுள்ள இயக்கம் என்று கூறுகிறார்கள். அது அவர்கள் இயக்கம் என்று கூறுவதில் தவறு ஏதுமில்லை. ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் ஒட்டுமொத்தமாக வாங்கிய வாக்குகள் 89 லட்சம் மட்டும்தான். அப்படியானால் ஒரு கோடியே 60 லட்சம் பேர் எங்கு சென்றார்கள் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி உள்ளனர். 2021ல் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் கூறும்பொழுது நமக்கும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கும் பெரியதாக வாக்கு வித்தியாசம் இல்லை. வெறும் ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் தான் என்று கூறுகின்றனர். ஆனால், உண்மை நிலை என்னவென்றால் திமுக கூட்டணி பெற்றது ஒரு கோடியே 74 லட்சம் வாக்குகள்.ஆனால் எதிர்க்கட்சிகள் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 53 லட்சம் வாக்குகள். ஏறக்குறைய 20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
அவர்கள் வளர்கிறார்களா தேய்கிறார்களா என்பது நமக்கு தேவையில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அவர்களுடைய வாக்குகளும் திமுகவிற்கு தான் வாக்களிக்கப்பட்டது. தமிழக முதல்வரின் அன்றாட பணியில் 50% பணியை தனது தோளில் சுமந்து கொண்டு பணியாற்றுபவர் தான் துணை முதல்வர் உதயநிதி. சிறுபான்மையினருக்காக தோளோடு தோள் நின்று உழைக்கக்கூடிய இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். சிறுபான்மையினர் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக உழைக்கக் கூடியவர் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது கரத்தை பொதுமக்களாகிய நீங்கள் வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, கட்சி நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், செங்குட்டுவன், லீலாவேலு, வட்ட செயலாளர்கள் சிவக்குமார், ஜெயச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், ராஜேஸ், மாமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.