அடுத்த ஆண்டு(2026) நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறது. இதற்காக இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்கள் என தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். கடந்த வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், இன்று (செப்.27) சனிக்கிழமை கரூர், நாமக்கல் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக த.வெ.க தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அவர், திருச்சி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நாமக்கல் புறப்பட்டுச் சென்றார். திருச்சியை போலவே நாமக்கல்லிலும் விஜய்க்கு சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக இளம் பெண்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால், பிரச்சார வாகனம் அவர் பேசும் இடத்தை அடைய கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆனது. பின்னர் நாமக்கல் வளையப்பட்டி கே.சி. திரையரங்கம் அருகே அவரது வாகனம் மதியம் 2:30 மணி அளவில் வந்தடைந்தது. பின்னர் அவர் பிரசார வாகனத்தில் நின்றபடி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து பேசியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் லாரி பாடி கட்டும் தொழில், முட்டை உற்பத்தி, விசைத்தறி தொழில்கள் பிரதானமாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து 5 கோடி முட்டைகள் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற வரிகளை எழுதியவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. பல்வேறு சிறப்புகள் பெற்ற நாமக்கல்லில் முட்டை சேமிப்பு கிடங்கு அமைத்துக் கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்களே, அதை நிறைவேற்றினார்களா? அதேபோல கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும், தானியக்கிடங்கு அமைக்கப்படும் என்று சொன்னார்கள் அதை நிறைவேற்றினார்களா? , அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று சொன்னார்கள் செய்தார்களா? . இது போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கொடுத்தார்களே? எதையாவது நிறைவேற்றினார்களா?. ஆண்ட கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுகிற கட்சியாக இருந்தாலும் சரி கண்டு கொள்ளவே இல்லை. திமுக போல பொய்யான வாக்குறுதிகளை தமிழக வெற்றிக்கழகம் கொடுக்காது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளான கல்வி, குடிநீர், மருத்துவ வசதி, சாலை வசதி, போக்குவரத்து, ரேஷன் போன்றவை செய்து கொடுக்கப்படும். எங்களது முதல் எதிரி பாசிச பாஜக. இரண்டாவது எதிரி திமுக. மூச்சுக்கு 300 தடவை அம்மா…அம்மா… என்று சொல்லும் அதிமுக, பாரதிய ஜனதாவுடன் கொள்கை இல்லாத கூட்டணி அமைத்துக் கொண்டு சுற்றி வருகிறார்கள். திமுகவும், பாஜகவுடன் அண்டர் கிரவுண்ட் டீலிங்( ரகசிய உறவு) வைத்துக்கொண்டு உள்ளனர். திமுகவுக்கு ஓட்டு போடுவது பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போடுவதற்கு சமம். ஆகவே, திரும்பவும் சொல்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.கவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் கரூர் மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ள புறப்பட்டுச் சென்றார்.

Comments are closed.