Rock Fort Times
Online News

திருச்சி,அய்யாளம்மன் படித்துறையில் 7டி தியேட்டருடன் பறவைகள் பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட கலெக்டர் தகவல்…

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 13.70 கோடியில், 1.63 ஏக்கர் பரப்பளவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட இப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பிரதீப்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இப்பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது 50 சதவிகிதம் முடிந்துள்ளது. இதில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள்,வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட உள்ளது. இவ்வினங்களை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இன பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய பண்டை தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும், புல்வெளிகள்,சிற்பங்கள், நீருற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா திட்டமிடப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7டி திரையரங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. விரைவில் முழு பணிகளும் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்