நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா?- வைகோ பதில்…!
ஈரோடு மக்களவை உறுப்பினரும், மதிமுக மூத்த நிர்வாகியுமான கணேசமூர்த்தி கடந்த 24ம் தேதி தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(28-03-2024) அதிகாலை உயிரிழந்தார். இந்தநிலையில், கணேசமூர்த்தியின் உடல் வைக்கப்பட்டுள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கணேசமூர்த்தியிடம் சட்டப்பேரவைத் தேர்தலில் விருப்பப்பட்ட தொகுதி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்பொழுது இரு மக்களவைத் தொகுதி கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்று என்னிடம் கூறி இருந்தார். ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று சொல்லி இருந்தார். நானும், கணேசமூர்த்தியும் உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம். கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் அவர். ஆனால், சில நாட்களாகவே அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர்.
இந்த முடிவிற்கு வருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பெரிய இடி தலையில் விழுந்ததை போல இருக்கின்றது. எம்.பி.சீட் கிடைக்காததால் இறந்தார் என்பது உண்மையல்ல. இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.