திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் கணேசன். கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள் புரத்தில் உள்ள 94 சென்ட் நிலத்தை மோகன் தனது தந்தையின் பெயரில் வாங்கி இருந்தார். அதற்கான பட்டாவில் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று தவறுதலாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொடுக்குமாறு மோகன், கடந்த 5.3.2024 ம் தேதி லால்குடி வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் விசாரித்து லால்குடி துணை வட்டாட்சியருக்கு பரிந்துரைத்தார். ஆனால், 6 மாதங்கள் ஆகியும் பெயர் மாற்றி தரப்படாததால் மோகன், லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த துணை வட்டாட்சியர் ரவிக்குமாரை சந்தித்து தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு துணை வட்டாட்சியர் ரவிக்குமார் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதாக சொல்லியுள்ளார். அவ்வளவு தொகை தன்னால் தர இயலாது என்று மோகன் கூறியதால் இறுதியாக ரூ.20 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் மனு அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனையின் பேரில் இன்று(03-10-2024) மோகனிடமிருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சம் பணத்தை துணை வட்டாட்சியர் ரவிக்குமார் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ் , பாலமுருகன் , சேவியர் ராணி மற்றும் போலீசார், ரவிக்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர். லஞ்சம் வாங்கியதாக துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.