ஹரியானா மாநிலம், சோனேபத் மாவட்டத்தில் உள்ள பரவுடா கிராமத்தை சேர்ந்தவர் சுக்விந்தர். மல்யுத்த பயிற்சியாளரான இவர், கடந்த 2021 பிப்ரவரி 12 அன்று மனோஜ் மாலிக், அவரது மனைவி சாக்ஷி மாலிக், அவர்களின் மகன் சர்தாஜ் (4), மல்யுத்த பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், பர்தீப் மாலிக், மல்யுத்த வீராங்கனை பூஜா ஆகியோரை சுட்டுக் கொன்றார். அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியை ஒட்டிய மல்யுத்த மைதானத்தில் நடந்த சம்பவத்தின் போது அமர்ஜீத் என்ற மற்றொரு நபரும் காயமடைந்தார். மல்யுத்த பயிற்சியாளரான சுக்விந்தர் மீது அடுக்கடுக்கான புகார்கள் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந் சுக்விந்தர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ரோத்தக் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் சுக்விந்தருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும், ரூ.1.26 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ககன் கீத் கவுர் உத்தரவிட்டார். அப்போது நீதிபதி கூறுகையில், “இந்த வழக்கு அரிதானதிலும் அரிதான ஒன்று. இத்தகைய சூழ்நிலையில் ஆயுள் தண்டனைக்கு பதிலாக மரண தண்டனை விதிப்பதை தவிர இந்த நீதிமன்றத்துக்கு வேறு வழியில்லை. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்யும் வரை, இந்த தண்டனை நிறைவேற்றப்படாது”என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.