Rock Fort Times
Online News

ஜாதி, மதங்களைக் கடந்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் – திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ…!

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் துரைவைகோ தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.  திருச்சி ரெட்டைவாய்க்கால் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் ராம்ஜிநகர், கே.கள்ளிக்குடி, புங்கனூர், நவலூர்குட்டப்பட்டு, அரியாவூர், சத்திரப்பட்டி பஸ்நிலையம்,  அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், கோமங்கலம், ஆலம்பட்டிபுதூர் . மாத்தூர், எரங்குடி, தும்பக்குறிச்சி, சேதுராப்பட்டி, அளுந்தூர், நாகமங்கலம் பகுதிகளில் தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் மக்கள் மத்தியில் துரைவைகோ பேசும்போது, எல்லா தேர்தல்களிலும் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். தீயவர்களை புறந்தள்ளுங்கள் என்று தான் கூறுவேன். ஜாதி, மதங்களை கடந்து, நல்லவர்களை நீங்கள் தோந்தெடுக்கும் போது, உங்கள் பகுதிக்கு நல்ல திட்டங்கள் வரும். அடுத்து வரும் சந்ததிக்கு நல்லது ஏற்படும்.  ஜாதி, மதம் பார்க்காதீர்கள். நான் படித்துள்ளேனா?, என் மீது குற்ற வழக்குகள் இருக்கிறதா? என்று பாருங்கள். வைகோ மகனான நான் நல்லவரா என்று மட்டும் பாருங்கள். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு நீங்கள் நல்ல ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ததால் தான் இந்த தொகுதிக்கு பஸ் நிலையம், காவிரி பாலம் என்று ரூ.1000 கோடிக்கு மேல் பல வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்துள்ளார். அதுபோல, அமைச்சர் கே.என்.நேரு ரூ.3 ஆயிரம் கோடிக்கு திருச்சிக்கு திட்டங்களை கொண்டுவந்துள்ளார். சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வளர்ச்சிப்பணிகள் நடப்பது திருச்சியில் மட்டுமே. அதுபோல் தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்களித்து என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யுங்கள். நான் உங்களின் குரலாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்து இந்த தொகுதிக்கு தேவையான வளர்ச்சிப்பணிகளையும், திட்டங்களையும் பெற்றுக்கொடுப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மேலும் ஸ்ரீரங்கத்துக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் நடவடிக்கை எடுப்பேன்.  ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க காவிரி-கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவேன் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின்போது திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, திருச்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி,  மணிகண்டம் ஒன்றிய திமுக செயலாளர் மாத்தூர் கருப்பையா, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, அந்த நல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, மதிமுக மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி. சேரன், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநில தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று ஆதரவு திரட்டினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்