Rock Fort Times
Online News

அரசு பள்ளிகளில் சர்ச்சை பேச்சு: ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணு கைது?

சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மகா விஷ்ணு எனும் மேடைப் பேச்சாளர், மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகளுக்கு அவர்கள் முற்பிறப்பில் செய்த பாவம்தான் காரணம் என்று கூறினார். அவரது இந்த பேச்சு சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சைக் குறுக்கீடு செய்த பார்வை மாற்றுத்திறனாளி தமிழாசிரியர் சங்கரிடம் வாக்குவாதம் செய்து மகா விஷ்ணு பேசியதற்கும் கண்டனங்கள் எழுந்தன. அவர் மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தின் மற்றும் உரிமைகளுக்கான தலைவர் வில்சன், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வந்தனர். வல்லுநர்களின் அறிவுரையின்படி மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறையைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார். இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனுவாசன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்த்துக் குரல் கொடுத்த மாற்றுத்திறனாளி தமிழ் ஆசிரியரிடம் மரியாதைக் குறைவாக பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்