தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம் – ஒழுங்கு நிலவரம் தொடர்பாக, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கொலைகள் குறித்து ஆளுநரின் மதிப்பீட்டையும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் மத்திய அரசு கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகையன்றும், அதற்கு அடுத்த நாள் அதிகாலையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்றன. இந்தச் சம்பவங்களே மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை கோரிக்கைக்கு உடனடிக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிகிறது. தேனி மாவட்டத்தில் இளைஞர்கள் சிலர் நடத்திய தாக்குதலில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் இதில் அடங்கும். தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ள நிலையில், மாநிலத்தின் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.