சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் சமையல் எரிவாய் விலையானது மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்தவகையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையானது குறைந்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் விலையானது உயர்ந்தது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் 7.50 ரூபாயும், செப்டம்பர் மாதம் 38 ரூபாயும் அதிகரித்தது. அக்டோபர் மாதம் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையானது 49 ரூபாயும், நவம்பர் மாதத்தில் 60 என தொடர்ந்து உயர்ந்தது. இதனால் சிறிய ஹோட்டல் முதல் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த 4 மாதங்களில் மட்டும் 154 ரூபாய் உயர்ந்து இருந்தது. இந்தநிலையில் டிசம்பர் மாதம் துவக்கமான இன்று(1-12-2024) 19 கிலோ வணிக சிலிண்டர் விலையானது, 16 ரூபாய் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 5 மாதத்தில் 170 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி 19 கிலோ எடைகொண்ட வர்த்தக சமையல் எரிவாயு விலையானது 1980 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு விலையில் எந்தவித உயர்வும் அறிவிக்கப்படவில்லை. இதனால் சமையல் எரிவாயு 818.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Comments are closed.