Rock Fort Times
Online News

போலி உறுப்பினர்களை நீக்கிவிட்டு விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும்- அமைச்சர் கே.என்.நேரு…!

கூட்டுறவுத் துறையின் சார்பில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2024 திருச்சி மாவட்ட அளவிலான விழாவாக, திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கி தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், மறைந்த முதல்வர் மு.கருணாநிதி காலத்தில்தான் கூட்டுறவுத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நிலவள வங்கி, கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றுக்கு சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்பட்டது. அப்போது, 26 ஆயிரம் நியாய விலைக் கடைகளில் 4 ஆயிரம் கடைகள் மட்டும்தான் சொந்தக் கட்டிடத்தில் இயங்கின. இதனையறிந்து உள்ளாட்சித்துறை மூலம் ஒரே ஆண்டில் 12 ஆயிரம் புதிய நியாய விலைக் கட்டிடங்களை கட்டித் தந்தவர் கருணாநிதி. இப்போது, எம்எல்ஏ, எம்பி தொகுதி நிதியில் நியாய விலைக் கடை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் 1,254 நியாய விலைக் கடைகள் மூலம் 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகின்றனர்.

கட்டிடங்கள் மட்டும்லலாது விவசாயிகள் பெறும் கடனுக்கான வட்டியையும் படிப்படியாக குறைத்தவர் கருணாநிதி. தொடக்கத்தில் 9 சதவீதமாக இருந்த வட்டியை 7 சதவீதமாகவும், பின்னர் 3 சதவீதமாகவும் குறைத்து, அதனால் ஏற்படும் செலவை ஈடுகட்ட நபார்டு வங்கிகள் மூலம் கடன் பெற்று நிவர்த்தி செய்தார். இப்போது, விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ.600 கோடி கடன் வட்டியில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. உரங்கள் மற்றும் வேளாண் இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது. வேளாண் உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. எந்தத் துறையாக இருந்தாலும் அதில் கூட்டுறவு அமைப்பு இல்லாமல் இல்லை. பணியாளர் கூட்டுறவு சங்கம் மூலமாக கூட்டுறவுத்துறை அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் அனைத்தும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு கடன் வழங்கும். ஆனால், கூட்டுறவு சங்கம் மட்டும்தான் கடன் பெறும் நபர் திரும்ப செலுத்தும் தகுதியை அறிந்து ஆவணங்கள் இல்லாமல் கடன் வழங்குகின்றன. நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்றால், அந்த விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பது கூட்டுறவுத்துறை மட்டுமே. இத்தகைய சிறப்பு மிக்க கூட்டுறவு அமைப்புகளுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் எப்படி தேர்தல் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அரசு விழாவில் அரசியல் பேச வேண்டாம் என விரும்புகிறேன். கூட்டுறவு அமைப்புகளில் போலியான உறுப்பினர்களை கண்டறிந்து, அவர்களை நீக்கம் செய்து, உண்மையான உறுப்பினர்களை கொண்டு கூட்டுறவு தேர்தலை நடத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் கூட்டுறவு தேர்தலுக்கான தேதியை முதல்வரே அறிவிப்பார் . இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார் இந்த விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தி.ஜெயராமன், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் தா.அரசு, கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் பா.செந்தில்குமார், திருச்சி எம்பி துரை வைகோ, மேயர் மு. அன்பழகன் மற்றும் எம்எல்ஏ-க்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், சிறந்த சங்கங்களுக்கும் கேடயங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. கூட்டுறவு வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்