முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மார்ச் 1ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ம் நாள் தனது எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். தலைமை கழகத்தின் சார்பில் மார்ச் 1ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது என்பதை அறிவிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த விழாவுக்கு தலைமை வகிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார். அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் , ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் வருகை தந்து நம் முதலமைச்சரை வாழ்த்த இருக்கிறார்கள். நமது தலைவர் ஏற்புரை ஆற்ற இருக்கிறார். சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியம் நன்றியுரை ஆற்றிட, சென்னை மாவட்ட கழக செயலாளர்கள் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமைக் கழகத்தின் சார்பில் மேற்கொள்வார்கள். நம்முடைய தலைவரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாற இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போவதாகவும், மகத்தான பல்வேறு செயல்களுக்கு தொடக்கமாகவும் இந்த கூட்டம அமையப் போகிறது. இந்தியாவின் புதிய விடியலுக்கான பிறந்தநாளாகவும் அமையப் போகிறது.எழுச்சிமிகு இயக்கத்தின் – ஏற்றமிகு தலைவருக்கு எழுபதாவது ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல கழகத்தின் இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் – முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.