“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்…- கொடுக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு…!
அரசு துறை சேவை, திட்டங்களை, வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15-07-2025) கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, நவம்பர் 30-ந் தேதி வரை இந்த முகாம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்களும் என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கும் இந்த முகாமில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியுள்ள மற்றும் விடுபட்ட பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த முகாம்களில் வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.