Rock Fort Times
Online News

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..!

தேர்தலை முன்னிட்டு, தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 19, 2026) சென்னையில் வெளியிட்டார். பல புதிய சிந்தனைகள் மற்றும் வித்தியாசமான வாக்குறுதிகளுடன் இந்த அறிக்கை வெளியாகி, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தின் சீரான மற்றும் சமநிலை வளர்ச்சிக்காக, நிர்வாகத்தை ஒரே இடத்தில் மையப்படுத்தாமல் பரவலாக்கும் திட்டத்தை அவர் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை முதன்மைத் தலைநகரமாகவும், திருச்சி நிர்வாகத் தலைநகரமாகவும், கோவை தொழில் தலைநகரமாகவும், மதுரை கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரமாகவும், கன்னியாகுமரி சுற்றுலாத் தலைநகரமாகவும் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி கிடைக்கும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், விவசாயத்தை ஒரு சாதாரண தொழிலாக அல்ல, அரசுப் பணியாக உயர்த்தும் முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயத்தை லாபகரமான துறையாக மாற்றுதல், விவசாயிகளுக்கு அரசுப் பணியாளர் அந்தஸ்து வழங்குதல் மற்றும் மாதாந்திர ஊதியம் வழங்குதல் போன்ற திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், விவசாயத்துக்கு புதிய மரியாதையை அளிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளிலும் பெரிய மாற்றங்களை கொண்டு வருவதாக சீமான் தெரிவித்துள்ளார். அதில் தனியார்மயத்தை கட்டுப்படுத்துதல் அல்லது ஒழித்தல், அனைவருக்கும் சமமான தரமான கல்வி, உலகத்தரம் வாய்ந்த இலவச அரசு மருத்துவ சேவைகள் ஆகியவை அடங்கும். இத்தகைய நடவடிக்கைகள் சமூக சமத்துவத்தை உறுதி செய்யும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்குதல், இயற்கை வளங்களை பாதுகாக்க தனி அமைச்சகம் அமைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறப்பு படை உருவாக்குதல் ஆகிய திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது நிலைத்த வளர்ச்சிக்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்