Rock Fort Times
Online News

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை…!

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், திருநெல்வேலிக்கு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் சென்னையில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் இருந்து அனுப்பப்பட்டதாக அந்த பணத்தைக் கொண்டு சென்ற ஊழியர்கள் தெரிவித்தனர். அந்தப் பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்ட பணம் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதனை நயினார் நாகேந்திரன் மறுத்தாலும், அவர் மீது போலீசில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. இது ஒருபுறம் இருக்க “திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, நாளை(18-04-2024) விசாரிப்பதாக தெரிவித்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்