பெண் போலீஸார் மற்றும் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீது சென்னை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த சவுக்கு சங்கர், ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீன் பெற்று வந்தார். இதனிடையே, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அவரது தாயார் கமலா, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீதுள்ள பிற வழக்குகளில் ஜாமீன் பெற தேவையில்லை எனில், விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, தன் மீதுள்ள அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்குமாறு சவுக்கு சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், சவுக்கு சங்கர் மீது தேனி நகர இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார், குண்டர் சட்டத்தில் மீண்டும் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில், சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு இன்று(14-08-2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கிய பிறகும், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி நேரடியாக கேள்வி எழுப்பினார். மேலும், அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் ஆணை பிறப்பித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Comments are closed.