முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசி பாட்டுப்பாடியதாக அருண் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் கைது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரும் வருண்குமார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பினர். மேலும் சமூக வலைதளங்களில் வருண்குமார் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகவும், ஆபாசமாகவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் கருத்துக்களை பரப்பினர். இது குறித்து தில்லை நகரில் வசிக்கும் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மிரட்டல் விடுப்பது, ஒரு நபரை அவமதிப்பது, அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடுவது, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் திருச்சி எஸ்பி குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கண்ணன் மற்றும் மதுரையை சேர்ந்த திருப்பதி ஆகிய இருவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 1 நீதிபதி சுபாஷினி முன்பு ஆஜர் படுத்தினர். அவர்கள் இருவரையும் வருகிற 16-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரின் உறவினர்கள், போலீசார் அவர்களை தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.
Comments are closed.