கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. கோடை விடுமுறை அளிக்கப்பட்டதும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம் – உதகை இடையே கோடை கால சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையில் இம்மாதம் மார்ச் 28-ம் தேதி முதல் ஜூலை 7-ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், உதகை முதல் மேட்டுப்பாளையம் வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இதில், மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 40 முதல் வகுப்பு மற்றும் 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் இருக்கும். குன்னூர் முதல் உதகை வரையில் மொத்தம் 220 இருக்கைகளில் 80 இருக்கைகள் முதல் வகுப்பும், 140 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இருக்கும். மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 2.25 மணிக்கு உதகைக்கு வந்தடையும். காலை 11.25 மணிக்கு உதகையிலிருந்து புறப்படும் ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT…👇
Comments are closed.