வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. இதற்காக கட்சியின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு அவரது பொதுக்கூட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அப்படித்தான் சேலம் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கூட்டம் அதிகரித்தது. இதற்கு அடுத்ததாக வேலூரில், வருகிற 23ம் தேதி விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக, வேலூரை அடுத்த பள்ளிகொண்டா அகரம்சேரி பகுதியில் மைதானத்தை சீர் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தவெக பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி கோரி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனிடம், கட்சி நிர்வாகிகள் சார்பில் இன்று( பிப்.17) கடிதம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், “விஜய் பிரச்சாரத்திற்கான அனுமதி விரைவில் உறுதிப்படுத்தப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் 100 சதவீதம் கடைப்பிடிப்போம் என உறுதியளித்துள்ளோம். அதேபோல, மக்கள் சந்திப்பிற்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்த மக்கள் சந்திப்புக்கு, சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய மேடை அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், மொத்தமாக 25,000 பேர் கலந்து கொள்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் பங்கேற்கலாம். ஒவ்வொரு கேலரிக்கும் தனித்தனியாக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் உட்பட ஒரு மினி மருத்துவமனை அமைக்கப்படும். அவசர நிலைக்கு 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். அந்த வகையில், மருத்துவ வசதிகள், கழிவறை வசதிகள், போதுமான குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்புடன் செய்யப்பட்டு வருகிறது. ஆறு இடங்களில் 20 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வேலூருக்கு விஜய் சாலை மார்க்கமாக வரவுள்ளதால், இளைஞர்கள் யாரும் வாகனங்களில் பின் தொடர வேண்டாம் என கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ‘வேலூர் கோட்டையில் கால் வைக்கும் அனைவரும் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவார்கள்’ அதன் அடிப்படையில், வேலூர் வருகை விஜய்க்கு வெற்றியின் தொடக்கமாக அமையும்” என தெரிவித்தார்.

Comments are closed.