Rock Fort Times
Online News

சி.வி. சண்முகம் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகள் பறிப்பு… இ.பி.எஸ். அதிரடி…! 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, அ.தி.மு.க.விலிருந்து அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வுகளின் போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உட்பட 29 பேரை அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியிருந்தார். இந்த நடவடிக்கையால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த சி.வி.சண்முகம், அதிமுகவிலேயே நீடிப்பதா அல்லது மாற்று அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து திண்டிவனத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தீவிரமாக விவாதித்து வந்தார். இந்நிலையில் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேர் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் மாவட்டக் அதிமுக இணைச் செயலாளர் ஏ. ஆனந்தி, மாவட்டக் கழகப் பொருளாளர் கே.வி.என். வெங்கடேசன், மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் கே.எஸ். ஜெயபிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் எஸ். பாஸ்கரன், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் இ.எழில்ராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, வல்லம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஆர்.நடராஜன் என்கிற கிருஷ்ணன், மயிலம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஆர். விஜயன், ஒலக்கூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் வி. கிருஷ்ணமூர்த்தி, ஒலக்கூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கே. பன்னீர், திண்டிவனம் நகரக் கழகச் செயலாளர் சி.ஆர். ரூபன்ராஜ் மற்றும் மயிலம் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் வி. செந்தில்குமார் ஆகியோரும் அவரவர் வகித்து வரும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்