Rock Fort Times
Online News

போகி பண்டிகை: பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான புகை மூட்டம்- சென்னையில் 3 விமானங்கள் ரத்து…!

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் வீட்டில் தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். அதனை நாம் இன்று வரை பின்பற்றி வருகிறோம். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று(13-01-2025) கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பயனற்ற பொருட்களை எரித்து வருகின்றனர். இதன் காரணமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புகை மூட்டமாக உள்ளது. ஏற்கனவே காலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் புகையும் சேர்ந்து புகை மூட்டமாக இருக்கிறது.
இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். போகிப்பண்டிகை புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால், விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி, பெங்களூரில் இருந்து, இன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்