Rock Fort Times
Online News

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு; மத்திய அரசு சொல்லும் காரணம் ‘இதுதான்’…!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் இயக்கும் அளவுக்கு அங்கு போதிய மக்கள்தொகை இல்லை என்று காரணம் கூறியுள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால்
மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 32 கி.மீ.தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கவும், 27 கி.மீ. தூர உயர்மட்டப் பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 5 கி.மீ. தூர சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்க திட்டமிடப்பட்டது. கோவையில் 39 கி.மீ. தூரத்துக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது.
மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் மாநில அரசு வாயிலாக விரிவான திட்ட அறிக்கை வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 2 நகரங்களிலும் மக்கள்தொகையை காரணம் காட்டி, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் திருப்பி அனுப்பியது.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க மக்கள்தொகை எண்ணிக்கை குறைந்தபட்சம் 20 லட்சம் இருக்க வேண்டும். மதுரை, கோவையில் 15 லட்சம் மக்கள் மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது’ என்று கூறி, திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. மெட்ரோ திட்டம் தொடர்பாக, தமிழக அரசு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்நிலையில், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது. ‘மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள்தொகை இல்லை. தவிர, அங்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்