Rock Fort Times
Online News

ஒரு சர்ச்சை முடிவதற்குள் அடுத்த சர்ச்சை: கரூர் ஜோதிமணி எம்.பி.யை ஆபாசமாக பேசிய பாஜக மாவட்ட நிர்வாகி…!

பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்றால் விஜய் முதலில் திரிஷாவிடம் இருந்து வெளியே வரவேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. திமுக பெண் எம்பிக்கள் கூட இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு அவர் இன்று தனது வருத்தத்தை தெரிவித்து கொண்டார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சை கரூரில் ஆரம்பமாகி இருக்கிறது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜோதிமணி. மனதில் பட்டதை தைரியமாக பேசக் கூடியவர். இந்நிலையில் கரூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை ஆபாசமாக பேசியுள்ளார். இதனை அறிந்த ஜோதிமணி, கரூர் பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் பேசிய விடியோவை வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் என்னைப் பற்றிப் பேசிய இந்த ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க, வீடியோவை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற மன உறுதியோடுதான் இங்கு வெளியிடுகிறேன். ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனியொரு தாயால் கண்ணியத்தோடும், நேர்மையோடும், துணிச்சலோடும், மதிப்பீடுகளோடும் வளர்க்கப்பட்ட ஒரு பெண் நான். 20 ஆண்டு கால கடுமையான, நேர்மையான அர்ப்பணிப்பு மிகுந்த அரசியல்,சமூகப் பணிக்குப் பின்பே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும் வாய்ப்புக் கிடைத்தது. எனது தாயின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு அனைத்துப் பொறுப்புகளையும், பிரச்னைகளையும் தனித்தே கையாள வேண்டிய சூழல். ஆனாலும் சோர்வற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். போராடிக் கொண்டிருக்கிறேன். இவரைப் போன்றவர்களைப் பொருத்தவரை பெண் என்றாலே வெறும் உடல். பாலியல் பொருள் அவ்வளவே. எனக்கு நடந்தது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. இந்த நாட்டில் பொது வெளிகளில் நுழையும் பெண்கள் காலம்காலமாக அனுபவித்து வரும் மிகப்பெரிய கொடுமை. இதை கட்டுப்படுத்தாமல் விட்டால், இது ஒரே ஒரு பெண்ணை மட்டும் பாதிக்காது. பல பெண்களின் குரலை மௌனமாக்கும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்