Rock Fort Times
Online News

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை- சென்னை ஐகோர்ட் அதிரடி…

கடந்த 1996ம் ஆண்டு முதல்-2001 வரை திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்
துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.
இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்களை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல, பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டுள்ளது. பொன்முடியின் மனைவிக்கு 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவர் தனியாக வர்த்தகம் செய்கிறார். இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என்று வாதிட்டனர். மேலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் டிசம்பர் 21-ம் தேதி( இன்று) அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. . தீர்ப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா
3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்தும், மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் அளித்தும் தீர்ப்பளித்தார்.
இதன்மூலம், பொன்முடி அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழக்கிறார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்