ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த சென்ற அண்ணாமலை கைது- * வீட்டு காவலில் பாஜக தலைவர்கள்…!
டாஸ்மாக் நிறுவனங்களில் அண்மையில் சோதனை மேற்கண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், ரூ.1000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்திருந்தனர். இதுகுறித்து முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தார். அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அதற்கு, தான் தலைமை ஏற்க இருப்பாதவும் கூறியிருந்தார். இந்தநிலையில் போராட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வெளியூர்களிலிருந்து புறப்பட்ட பாஜகவினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதேபோல சென்னையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசையும் போராட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து வெளியே வர முடியாதபடி போலீசார் வீட்டு வாசலில் குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞர் அணி நிர்வாகி வினோஜ் பி.செல்வமும் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதுதொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க., அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், இன்று(17-03-2025) சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், மாநிலச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது. கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?. தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?. இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இந்தநிலையில் போராட்டத்தில் பங்கேற்பதற்காக களத்தூரில் உள்ள வீட்டிலிருந்து எழும்பூர் நோக்கி சென்ற அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
Comments are closed.