Rock Fort Times
Online News

இந்திய ராக்கெட் ஏவுதள விளம்பரத்தில் சீன கொடி- திமுகவுக்கு பிரதமர் மோடி ,அண்ணாமலை கண்டனம்…!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். இன்று(28-02-2024) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். அப்போது ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், தூத்துக்குடியின் பொறுப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை. இதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரம் தான் காரணம் என கூறப்படுகிறது. ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்ட வந்திருக்கும் பிரதமர் மோடியை வரவேற்று அவர் அளித்த விளம்பரத்தில், சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றுள்ளது. இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட்டுகளையே நம் தேசம் ஏவும் நிலையில் சீன ராக்கெட்டுகளின் புகைப்படத்தை வைத்து விளம்பரம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பிரதமர் மோடி திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதனை குறிப்பிட்டு பேசுகையில், திமுகவின் தேசப்பற்று இதுதான் என கடுமையாக விமர்சித்தார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரம் சீனா மீதான திமுகவின் அர்ப்பணிப்பையும், நமது நாட்டின் இறையாண்மையை முற்றிலும் வெளிப்படுத்துகிறது. இஸ்ரோவின் முதல் ஏவுதளம் கருத்தாக்கம் செய்யப்பட்டபோது இஸ்ரோவின் முதல் தேர்வாக இருந்தது தமிழகம் தான். இதற்கான கூட்டத்தில் அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை கடுமையான தோள்பட்டை வலி காரணமாக பங்கேற்க முடியாத நிலையில் தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அவருக்காக இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்து இறுதியில் மதியழகன் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டார். அதுவும் மோசமான ரீதியில் கலந்து கொண்டார். இதுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் விண்வெளி திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பு. திமுக பெரிதாக மாறவில்லை. இன்னும் மோசமாகிவிட்டது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்