Rock Fort Times
Online News

காற்றில் உள்ள மாசு மனித ஆயுளை குறைக்கும்..

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று ( 30.05.2023 ) தேசிய தூய்மைக் காற்று திட்டம் குறித்த சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது,-
தூய்மையான காற்றை நாம் உறுதிப்படுத்த வேண்டும். காற்று மாசு நமது ஆயுளை குறைத்து விடும். தூய்மையான காற்று நமது ஆயுளை  1.3 ஆண்டுகள் அதிகரிக்கின்றன என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வட மாநிலங்களைவிட தமிழகத்தில் மாசு குறைவு தான். நம்மைவிட சுமார் 3 சதவிகித மாசு வடமாநிலங்களில் நிலவுகின்றன. மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள 122 நகரங்களில் ரூ.233 கோடியில் காற்று மாசை தூய்மைப் படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுவாக உள்நாட்டு உற்பத்தி அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று மாசு அதிகமுள்ளது என பல்கலைக்கழக துணைவேந்தர் குறிப்பிட்டார். எனவேதான் பூட்டானில் உள்நாட்டு உற்பத்திக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட காற்று மாசை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறதாம். தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதில் கூட நேரத்தை கொண்டு வந்திருப்பது, நமது கொண்டாட்டத்தை தடுக்க அல்ல காற்று மாசை தடுக்கத்தான். இருக்கும் காற்றை தூய்மையாக்கும் வகையிலும் அதை உறுதி செய்யும் வகையிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நமது தமிழக முதல்வர் கடந்த நிதியாண்டில் சுற்றுச்சூழல் துறைக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கியுள்ளதை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் அத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. செல்வம், பதிவாளர் லெ.கணேசன், தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை துணை இயக்குநர் எல்.சௌமியா, திருச்சி மாவட்ட சூற்றுச்சூழல் பொறியாளர் சா.சிவரஞ்சனி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். தமிழக அரசு சுற்றுச்சூழல் துறை வழிகாட்டலுடன் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மூலம் தேசிய தூய்மை காற்றுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருச்சி, மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேசிய பசுமைப்படை அமைப்பு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுத்துறை, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் இணைந்து செய்திருந்தன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்