திருச்சியில் 22, 23 தேதிகளில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…!
திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர்கள் அழைப்பு
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்துள்ள திமுக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், திருச்சி அதிமுக புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, மாநகர் ஆகிய மாவட்டங்கள் சார்பில் திருச்சி அல்லித்துறை அண்ணா திடலில் நாளை (22-07-2024) காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ, அதிமுக அமைப்பு செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் வளர்மதி, ரத்தினவேல், சிவபதி, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இதேபோல, நாளை மறுநாள் 23ந்தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மேல கல்கண்டார் கோட்டையில் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையிலும், திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேற்கண்ட 2 ஆர்ப்பாட்டங்களிலும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டகழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்ஜோதி, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமார், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Comments are closed.