குறைவழுத்த மின் விநியோகத்தால் பாதிப்பு: சீராக மும்முனை மின்சாரம் வழங்க மின்வாரியத்துக்கு திருச்சி நீதிமன்றம் உத்தரவு…!
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ள இனாம் சமயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சித்திரக்குமார். இவர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் திருச்சி மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் கடந்த பல மாதங்களாக குறைந்த மின் அழுத்தத்தில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் வீட்டிலுள்ள ஏசி, கிரைண்டர், மிக்ஸி, பேன், மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை இயக்க முடியவில்லை. மேலும், அவை பழுதடைந்து விடுகின்றன. இதுகுறித்து பலமுறை மின் வாரியத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சீரான மின்னழுத்தத்தில் மின் வினியோகம் வழங்க மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் மின்வாரிய சமயபுரம் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. அதன்பேரில் மின் வாரிய அலுவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அப்போது பொதுமக்கள் கொடுத்த புகார் மனு மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மும்முனை மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மேற்கண்ட கிராமத்திற்கு மும்முனை மின்சாரமாக மாற்றப்பட்டது. அது தொடர்பான ஒரு அறிக்கையை மின் வாரிய அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். மனுதாரர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் சீரான மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்து, தங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை சமாதானமாக முடித்துக்கொள்வதாக தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயசிங் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இரு தரப்பினரையும் சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் சமரச தீர்வளித்தனர். மேலும் வரும் நாட்களிலும் மின் விநியோகம் சீராக அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். பொதுமக்கள் இது போன்ற சேவை குறைபாடுகளுக்கு இந்த நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.