2026-ல் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் ; ஆதவ் அர்ஜுனின் ” திமுக அட்டாக் ” பேச்சுக்கு திருச்சியில் தொல் .திருமாவளவன் பதில்
அம்பேத்கரின் 68வது நினைவு தினமான இன்று ( டிசம்பர் -06 ) “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்கிற தொகுப்பு நூலை அவரின் நினைவு நாளில் விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட்டது.
இந் நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், மேனாள் நீதிபதி சந்துரு, அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டருமான ஆனந்த் டெல்டும் டே, விசிக துணை பொது செயலாளரும் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமான ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா., 2026 ல் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். இங்கு பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கப்படக்கூடாது. தமிழகத்தை கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும்.
குடும்ப ஆட்சி ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளை கூறி 2014-ல் பாஜக வென்றார்கள். இன்றைக்கு வரைக்கும் பாஜகவை யாராலும் வெல்ல முடியவில்லை. ஆனால், தமிழகத்தில் ஊழலை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாக வேண்டும்.
அதில் தலித் மக்கள் பங்கு பெற வேண்டும். மன்னராட்சியை கேள்வி கேட்டால் உடனே சங்கி என்று சொல்வார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவு எடுத்து விட்டார்கள் என்று பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. இந்நிலையில் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய திருமாவளவன்., திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனிடம் விளக்கம் கேட்கப்படும்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதர்வ் அர்ஜுன் பேசியது அவருடைய சொந்த கருத்து. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது குறித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எனக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை நான் சுதந்திரமாகத்தான் முடிவெடுத்தேன். உலகம் முழுவதும் தற்போது மக்களாட்சி தான் நடைபெறுகிறது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டு பல காலங்கள் ஆகிறது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான் நடைபெறுகிறது என்று கூறினார். இருந்தாலும் விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனனின் திமுக எதிர்ப்பு மனநிலை பேச்சு கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.