ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் புனிதநீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இறந்த நம் முன்னோர்கள் ஆடிஅமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் இப்பூவுலகிற்கு வருவார்கள் என்பதும், அந்நாட்களில் மூதாதையர்களுக்கு, மறைந்த பெற்றோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆசி கிட்டும், நாம் நினைத்த காரியம் கைகூடும் என்பதுஐதீகம். குறிப்பாக கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தால் இன்னும் சிறப்பு. அந்தவகையில் ஆடி அமாவாசையான இன்றைய தினம் (ஜூலை 24) திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் இன்னும் அதிகரித்தது. பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து அங்குள்ள புரோகிதர்கள் உதவியுடன் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் போன்ற பிதுர்கர்மாக்களை செய்தனர். பலர் அன்னதானம் போன்ற அறச் செயல்களிலும் ஈடுபட்டனர். இதனால் மூதாதையர்கள் பசியும், தாகமும் விலகி நமக்கு ஆசி வழங்குவர் என்பது நம்பிக்கை. அம்மா மண்டபம் படித்துறையில் ஸ்ரீரங்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவில்களில் கூட்டம்:
புனிதநீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்தவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் சுற்றுப்பகுதி முக்கிய கோவில்களில் இன்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகமிருந்தது.
Comments are closed.