ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக லால்குடியைச் சேர்ந்த பெண் கணவர் மீது குற்றச்சாட்டு…!
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கீழஅரசூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்த்-லீலாவதி தம்பதியினரின் மகள் பிரியாவிற்கும், கீழ அரசூர் அருகே உள்ள மால்வாய் கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரன்- செல்லம் தம்பதியினர் மகனான அறிவழனுக்கும் கடந்த 2019 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக பிரியா குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டிற்கு தேவையான அனைத்து சீர்வரிசை பொருட்கள், 30 பவுன் நகையும் போட்டு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே அறிவழகன் மது அருந்தி விட்டு மனைவி பிரியாவை திட்டி அடித்ததுடன் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும், தங்களுக்கு ரூ.30 லட்சம் கடன் இருப்பதாகவும், ஆகவே உனது தாய்- தந்தையிடம் சென்று ரூ.10 லட்சம் வாங்கி வருமாறு அறிவழகன் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அறிவழகன், பிரியாவிற்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்தநிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று லால்குடி சார்பு நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டும் என அறிவழகன் வழக்கு தொடர்ந்தார். தற்போது அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதன்காரணமாக பிரியா, மாமியார் மாமனார் வீட்டில் தங்காமல் தனது தாய்- தந்தை வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கணவன் வெளிநாட்டில் இருந்து வருவதை அறிந்த பிரியா மாமனார்- மாமியார் வீட்டுக்கு சென்றபோது அவரை வீட்டுக்குள் விடாமல் துரத்தி அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லக்குடி காவல் நிலையத்தில் பிரியா தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் அறிவழகன் தரப்பினருக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.ஆனால் பிரியா, தான் கணவனுடன் வாழ வேண்டும் என கணவர் வீட்டிலேயே இருந்து வருகிறார். தன்னை கணவருடன் சேர்த்து வாழ வைக்க வேண்டும் என அவர் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது தினமும் அறிவழகன் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியது மட்டுமல்லாமல் அவரது, தாய் தந்தையரும் அடித்து துன்புறுத்தினர். இதுகுறித்து கேட்டால் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என கூறுகின்றனர். இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய முடியும் என்றனர்.
Comments are closed.