சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் பெரிய கருப்பசாமி துரைபாக்கம் 200 அடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. போலீஸ் நிற்பதை பார்த்ததும் அந்த ஆட்டோ திரும்பி செல்ல முற்பட்டது. இதனை கண்ட தலைமை காவலர் பெரிய கருப்பசாமி, அந்த ஆட்டோவை விரட்டிச் சென்று பிடித்தார். பின்னர், ஆட்டோவில் சோதனை செய்த போது அதில் 6 கிலோ எடை கொண்ட ரூ.1 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா இருந்தது . பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அவர் நங்கநல்லூரைச் சேர்ந்த சீனிவாச ராகுல் (29) என்பதும், பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும், பெங்களூருவில் இருந்த கஞ்சாவை வாங்கி வந்ததும் தெரியவந்தது. அந்த கஞ்சாவை யாரிடம் கொடுக்க கொண்டு செல்லப்பட்டது என்று கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது, வாட்ஸ்-அப் கால் மூலமாக மட்டுமே தொடர்பில் இருப்பதாகவும் கஞ்சாவை கொடுத்துவிட்டு பணம் பெறுவது மட்டும்தான் தன்னுடைய வேலை எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராகுல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.