திருச்சியில் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருந்தில்லா ஊசியை ஆட்டோ டிரைவர் உடலில் செலுத்தி கொலை செய்ததாக 2 திருநங்கைகள் உட்பட 5 பேர் கைது…!
திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் குணா என்கிற குணசேகரன் (வயது 34). ஆட்டோ டிரைவர். குடிபோதைக்கு அடிமையான இவர் அடிக்கடி கஞ்சாவும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதேபோல சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குணசேகரன் தனது மனைவி சுலோச்சனா, தாய் காமாட்சி ஆகியோருடன் தகராறு செய்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று தூங்கினார். இந்தநிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோ டிரைவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆட்டோ டிரைவர் குணசேகரன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் மீண்டும் குணசேகரன் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் தாயாரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:- குணசேகரன் தினமும் மது போதையில் வந்து மனைவி மற்றும் தாயாரை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் வெறுப்படைந்த அவர்கள் குணசேகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, சம்பவத்தன்று காமாட்சியின் உறவினர்களான விக்கி என்கிற லித்தின்யாஸ்ரீ (19), குபேந்திரன் என்கிற நிபுயா (19) மற்றும் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்துள்ளனர். காமாட்சியும், சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து கொண்டனர். இவர்கள் மூவரும் உள்ளே சென்று குணசேகரனின் உடலில் குபேந்திரன் மருந்தில்லா ஊசியை ஏற்றியுள்ளார். விஜயகுமாரும் லித்தினியாஸ்ரீயும், துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என நாடகமாடி உள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்காரணமாக போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி காமாட்சி, சுலோச்சனா, விக்கி, குபேந்திரன், விஜயகுமார் ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களில் இரண்டு பேர் திருநங்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.