திருச்சி துவாக்குடி தேவராயநேரி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ். அன்றாடம் ஊசி, பாசிமணிகள் விற்று அதில் கிடைக்கக்கூடிய வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் முடிக்கப்பட்டுள்ளது. இளைய மகள் ஹரிணி (வயது 18). நரிகுறவர் இன பெண்ணான இவர் திருவெறும்பூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையில் இருந்த நாட்களில் இவருக்கு கழுத்தில் வலி ஏற்பட்டது. நாளடைவில், கழுத்தில் கட்டி ஒன்று ஏற்பட்டு வளர ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஹரிணியை, பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால், குணமடையாமல் நாளுக்கு நாள் கட்டி பெரிதானது. இதனைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு 2 நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
இருந்தாலும் கட்டி வளர்ந்து கொண்டே சென்றது. இதனால் அவர் தினமும் சிரமப்பட்டு வருகிறார். இதற்காக அவர் உட்கொள்ளும் மருந்துகளின் விளைவால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தலையில் முடிகள் உதிர்ந்து வருவதாகவும், தன்னுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து பெரும் அவதிப்பட்டு வருவதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த கட்டி காரணமாக தன்னால் படிப்பை தொடர இயலவில்லை என்றும், தனக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய நிதி வசதி இல்லை என்றும் கூறுகிறார்.
இதுகுறித்து அப் பெண்ணின் பெற்றோர் கூறுகையில்,
பாசிமணிகளை விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களது மகளுக்கு கழுத்தில் பெரிய கட்டி ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் இன்னும் குணமாகவில்லை. மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் நாங்கள் உள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற இயலவில்லை. ஹரிணியின் இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும். அவரது மேற்படிப்புக்கு உதவிட வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.