பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (ஜூன்.09) மாலை 5 மணிக்கு சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடிப்படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இரண்டு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இடம்பெறும் பெண் போலீசார் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட், கருப்பு நிற தொப்பி மற்றும் கருப்பு நிற ஷூ ஆகியவை அடங்கிய சிறப்பு சீருடை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 29-ம் தேதி இந்த படையை தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, இன்று மாலை அதிகாரப்பூர்வமாக இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. சென்னையில் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் தங்கள் பணியைத் தொடங்க உள்ளனர். மேலும் இந்தசிறப்பு அதிரடிப்படையின் முக்கிய பணிகள்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்க மக்கள் இயக்கமாகச் செயல்படுதல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்ளுதல், குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல், காவல்துறையின் இருப்பை உறுதிசெய்து பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகியவை இந்த படையின் முக்கிய பொறுப்புகளாகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு அமைப்பில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.