பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே கல்லகம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் மஞ்சு விரட்டு நடந்தது. மஞ்சு விரட்டில் ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். சில காளைகள் பிடிவிடாமல் ஓடின. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை பார்வையிட கல்லக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இந்நிலையில், மஞ்சுவிரட்டு நடந்தபோது கல்லகம் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் (வயது 39) என்பவரை ஜல்லிக்கட்டு காளை ஒன்று முட்டி தள்ளியது. இதில் அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலகிருஷ்ணனின் மனைவி தனலட்சுமி கல்லக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மஞ்சுவிரட்டு நடத்திய அதே பகுதியைச் சேர்ந்த ராஜு, ராமலிங்கம், சிவக்குமார், பிச்சை, மணி, செல்வக்குமார், பன்னீர்செல்வம், செல்லத்துரை, முரசொலி மாறன் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.