திருச்சி உறையூர் லிங்கநகர் பகுதியில் கூட்டுறவுத் துறையின் புதிய நியாய விலைக் கடையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்யாவசிய பொருட்களை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சிக்கு அவர்கள் செய்தது என்ன?
தமிழ்நாடு காகித ஆலை, எம்.ஜி.ஆர் காலத்தில் திருச்சியில் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாவது யூனிட்டை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தேசிய சட்டப் பள்ளி கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். கருணாநிதி ஆட்சி காலத்தில் புதிதாக பொறியியல் கல்லூரி, ஐ.ஐ.எம்.கல்வி நிறுவனம், மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம், நீதிமன்ற புதிய கட்டிடம், குடிநீர் திட்டப் பணிகள், தற்போதைய மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கூடுதலாக குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள் என பல திட்டங்கள் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது புதிய பேருந்து முனைய கட்டுமானத்துக்கு ரூ.380 கோடி, புதிய சந்தை அமைக்க ரூ.100 கோடி, தொழில் பூங்கா அமைக்க, ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
யார் ஆட்சியில் திருச்சிக்கு அதிகமாக செய்துள்ளார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அ.தி.மு.க. ஆட்சியில் பாதாள சாக்கடைக்கு பணிகளை தொடங்கி விட்டு நிதி ஒதுக்காமல் சென்று விட்டார்கள். அதற்கு உரிய நிதியை ஒதுக்கி பணிகளை தி.மு.க.ஆட்சியில் செய்து வருகிறோம். நீதிமன்ற அலுவலகம் அருகில் உள்ள உய்யக்கொண்டான் ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடத்தில் ரவுண்டானாவை சுருக்கினால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அங்கிருந்து அல்லித்துறை வரை புதிய சாலை அமைக்க உள்ளோம். திருச்சி சிந்தாமணி முதல் குடமுருட்டி வரை உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. பெரும்பாலான திட்டங்கள் , தி.மு.க.ஆட்சி காலத்தில் தான் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளர் வைரமணி, கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், கவுன்சிலர்கள் இளங்கோ, பங்கஜம் மதிவாணன், விஜயா ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.