திருச்சி, கொண்டயம்பேட்டையை சேர்ந்த பரமசிவம் என்பவரது மனைவி சரஸ்வதி. இவர் சில தினங்களுக்கு முன்பு துறையூர் செல்வதற்காக திருவானைக்கோவில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தங்க நகைகள் அணிந்த இவரை நோட்டமிட்ட இளைஞர்கள் இருவர், இவ்வளவு தங்க நகைகளை அணிந்து கொண்டு வெளியில் செல்லலாமா ? பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் உங்கள் தங்க நகையை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் பேப்பரில் மடித்து தருகிறோம். அதை முடிந்து வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். இதை நம்பிய சரஸ்வதி தான் அணிந்திருந்த ஏழு பவுன் தங்க சங்கிலியை கழட்டி அந்த இளைஞர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது பேருந்து வரவே, அந்த இளைஞர்கள் பேப்பரை மடித்துக் கொடுத்து பத்திரமாக பாட்டியை பேருந்தில் ஏற்றி விட்டுள்ளனர். பேருந்தில் ஏறிய பிறகு பேப்பர் பொட்டலத்தை பிரித்துப் பார்த்த சரஸ்வதி, உள்ளே தங்கச் செயின் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சரஸ்வதியை ஏமாற்றி சென்ற இரு நபர்களின் கார் நம்பரை வைத்து அடையாளம் காணப்பட்டது. இக்கொள்ளைக்கு சென்னையை சேர்ந்த மகபூப் பாஷா என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ்குமார், கிஷோர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட இருவரிடமிருந்து ஏழு சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிறருக்கு உதவுவதுபோல் நடித்து நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டு வரும் இக்கும்பல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதே போல கைவரிசை காட்டி பலரிடம் தங்க நகைகளை பறித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments are closed.