Rock Fort Times
Online News

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி சொத்து குவிப்பு வழக்கு: இம்மாத இறுதியில் விசாரணை…

தமிழகத்தில் கடந்த 2001-2006-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பா.வளர்மதி.
அந்த காலகட்டத்தில் இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து பா.வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தார். பின்னர், இந்த வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் டிசம்பர் 4-ம் தேதி வாதங்களைத் தொடங்க வேண்டும் என்று வளர்மதி தரப்பு வழக்கறிஞர்களுக்கு கடந்த நவம்பர் 6-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணைக்கு தடைகோரி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி அனிருதாபோஸ் தலைமையிலான அமர்வு கடந்த டிசம்பர் 1-ம் தேதி விசாரித்தது. அப்போது பா.வளர்மதியின் தரப்பு வாதங்களை ஏற்ற உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது. இந்நிலையில் நேற்று(12-01-2024) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனது மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வளர்மதி சார்பில் வழக்கறிஞர் கோரிக்கையை முன் வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜனவரி இறுதி வாரத்தில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்